சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (38). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் குடும்பத்துடன் தங்கி கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.
பட்டறையில் இருந்து தங்க நகை திருட்டு: இவரது நகை பட்டறையில் ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 பேர் வேலை செய்து வருகின்றனர். இதேபோல் கடந்த மூன்று மாதங்களாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சைபுல் ரஹ்மான் (35) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு டீ குடிக்க வெளியே சென்ற சைபுல் ரஹ்மான் 10 மணி ஆகியும் பணிக்கு வராததால் சந்தேகமடைந்த பட்டறை உரிமையாளர் அருண் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
அப்போது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், சந்தேகத்தின் பேரில் பட்டறையில் இருந்து தங்க நகைகளை ஆய்வு செய்த போது, 122 கிராம் அதாவது சுமார் 20 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரிய வந்தது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு: உடனே அருண் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சைபுல் பட்டறையில் இருந்து நகைகளை திருடி சென்றது உறுதியானது. இதனை அடுத்து பட்டறை உரிமையாளர் அருண் இது குறித்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளுடன் தப்பிச் சென்ற சைபுல் ரஹ்மானை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ரவுடியை முகம் சிதைத்து கொன்ற கும்பல்... சேலத்தில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!
எதிர் வீட்டுகாரரை ஆத்திரத்தில் கொலை: சென்னை அமைந்தகரை ராஜகோபாலன் தெரு பகுதியில் வசித்து வருபவர் தமீம் அன்சாரி. இவர் அதே பகுதியில் டிபன் கடை மற்றும் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் டிபன் கடையில் உள்ள பாத்திரங்களை கழுவி வீட்டு வாசலில் ஊற்றி வந்த நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் மருந்து விநியோகம் செய்யும் முகமது உஷ்தான் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பாத்திரங்களை கழுவி வீட்டு வாசலில் ஊற்றியதால் கொலை: இந்த நிலையில் இன்று மாலை தமீம் அன்சாரி பாத்திரங்களை கழுவி வீட்டு வாசலில் தண்ணீரை ஊற்றியுள்ளார். இதனைப் பார்த்த முகமது உஸ்தான் கண்டித்துள்ளார். இதனை அடுத்து தமீம் அன்சாரி மற்றும் அவரது உறவினர்கள் முகமது உஸ்தானை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து முகமது உஸ்தான் வீட்டுக்குள் சென்று கூர்மையான பொருட்களை எடுத்து வந்து தமீம் அன்சாரியை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்த தமீம் அன்சாரியை அவரது உறவினர்கள் ஆட்டோவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர் பரிசோதனைகள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் முகமது உஸ்தானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிவேக வாகனம் மோதி காவலர் மருத்துவமனையில் அனுமதி: சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திர பாபு (57). இவர் நேற்று காலை 9 மணியளவில் தேனாம்பேட்டை எஸ்ஐடி பகுதியில் யு டர்ன் எடுப்பதில் நான்கு சக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி திருப்பும் பொழுது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருக்கக்கூடிய பேரிகார்ட் மீது மோதியுள்ளது.
அப்பொழுது பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அழகு குமார் (28) மீது மோதியதில் போக்குவரத்து காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு முகம் மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த நபர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் காவலரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு சக்கர வாகன ஓட்டுநர் கஜேந்திர பாபுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்