சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ''சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் கூறிய உண்மைக்கு புறம்பான கருத்தை நீக்க வேண்டும்'' என பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி வலியுறுத்தினார். அப்போது, நீக்க முடியாது என சபாநாயகர் கூறியதையடுத்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளியேறினர்.
இதன் பின்னர் தலைமைச்செயலாக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. மணிகூறியதாவது:
''சட்டப் பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு குறித்து பேசிய போது, பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று சட்டப்பேவையில் முதல்வரும், சட்டத்துறை அமைச்சரும் பேசியிருப்பது உண்மைக்கு மாறான தகவலாகும்.
இது சட்டப்பேரவை விதியை மீறிய செயலாக கருதி அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினோம். மேலும், அமைச்சர்கள் சிவசங்கர், ரகுபதி பேசும்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சாத்தியமில்லை என்ற பொருளில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் முடியும். அதை நடத்தாமல் முடியாது. அதிகாரமில்லை என்று பேசியுள்ளனர். 2008 புள்ளி விவர சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் தான் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறோம்.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு புள்ளிவிவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். சமூக நீதி இங்கு இல்லை, சமூக அநீதியை போக்க தான் வெள்ளை அறிக்கை கேட்கிறோம். ஒரு பத்து ஆண்டுகளுக்கான வெள்ளை அறிக்கை போதும். 10.5 சதவீதத்திற்கு மேல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால் நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன். பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டில் இருந்து மிகப் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு மாற்ற மருத்துவர் ராமதாஸ் தான் காரணம். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு போராடியது பாமக நிறுவனர் ராமதாஸ். இதற்கு 7 மாநாடுகள் நடத்தப்பட்டது.
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் ராமதாஸ் நானே இறங்கி போராடுவேன் என்றார். அதன் பின் அப்போது முதலமைச்சர் கருணாநிதி அழைத்துப் பேசி நடவடிக்கை எடுத்தார். அருந்ததிய மக்கள் இட ஒதுக்கீட்டிற்கு மாநாடு நடத்தினோம். பட்டியல் இன மலைவாழ் மக்களுக்கு, பட்டம் மேற்படிப்பில் இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போதுதான் இந்த சட்டத்தை கொண்டு வந்தார். மருத்துவம் மேற்படிப்பில் பழங்குடியின மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பதவிக்கு போகாமலேயே பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டம் மாநாடுகள் வாயிலாக பல இட ஒதுக்கீடுகள் வாங்கிக் கொடுத்தவர்கள். இன்று அமைச்சர் சிவசங்கர், ''வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ'' என்ற அடிப்படையில் பேசுகிறார். வன்னியர்களுக்கு 10.5 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் சொல்கிறார். 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மேல் குரூப் 1 போன்ற முக்கிய பதவிகளுக்கு 10.5 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். பொது வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன்.
இதை நிரூபிக்க முடியாவிட்டால் அமைச்சர் சிவசங்கர் அமைச்சர் பதவியில் இருந்துவிலகிக் கொள்வாரா? வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு புள்ளிவிவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் .குரூப் 1 போன்ற அனைத்து பதவிகளிலும் வன்னியர்களுக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளது என்று தெரிய வேண்டும். பிசி இட ஒதுக்கீட்டை பல தொகுப்புகளாக பிரித்துக் கொடுங்கள் என்று பலமுறை சட்டமன்றத்தில் கேட்டுள்ளோம்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு எந்தெந்த ஜாதிகளுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கை வேண்டும். எஸ்.சி மக்கள் இட ஒதுக்கீட்டில் உள்ள 18 சதவீதத்தில் எவ்வளவு இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும். வெள்ளை அறிக்கை கொடுக்கப்பட்டால் தான் தமிழக அரசில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என்று தெரியும்'' என ஜி.கே. மணி கூறினார்.
இதையும் படிங்க: திமுக எம்எல்ஏக்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் - பாமக தரப்பு பதில்!