திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கடையம் அருகே ரவணசமுத்திரம் கிராமத்தில் பழமை வாய்ந்த மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வரும் நிலையில், திருவிழாவின் முக்கிய அங்கமாகத் தேர்த் திருவிழா இன்று (ஜன.24) நடைபெற்றது.
கோயில் குருக்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடி திருத்தேர் வடம் பிடித்துத் தேர்த் திருவிழாவைத் தொடங்கி வைத்தனர். இப்பகுதியில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவு வசித்து வரும் நிலையில் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் இஸ்லாமியர்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்த சம்பவம் இந்து மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்து, முஸ்லிம் சமுதாய ஒற்றுமையை உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் வகையில் இஸ்லாமியர்கள் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவால் பங்கேற்றனர். இதற்கிடையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அக்லாயா என்ற பெண் தேர்த் திருவிழாவில் பங்கேற்றது அப்பகுதி மக்களிடம் மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மன் நாட்டை சேர்ந்த அக்லாயாவின் மகன் டெல்லியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, ரவணசமுத்திரம் பகுதியில் உள்ள ராதிகா என்பவரது மகள் டெல்லியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தனது சம்மந்தி மூலம் ரவணசமுத்திரத்தில் தேர் திருவிழா நடைபெறுவதை அறிந்து கொண்ட அக்லாயா எப்படியாவது அதை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தோடு ஜெர்மனியில் இருந்து தமிழகம் வந்துள்ளார். இன்று நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொண்டு ஊர் பொதுமக்களோடு உற்சாகமாகத் திருவிழாவைக் கண்டு ரசித்தார்.
இது குறித்து, ஜெர்மனி பெண் அக்லாயா ஈடிவி பாரத்-திற்கு அளித்த பேட்டியில், "நான் எனது சம்மந்தி ஊர் திருவிழாவைக் காண ஜெர்மனியிலிருந்து வந்துள்ளேன். இங்குள்ள மக்களின் கலாச்சாரம் பழக்க வழக்கம் மிகவும் பிடித்துள்ளது. பெண்களின் நடனம், கோலம் போடுவது மிகவும் பிடித்துள்ளது. குறிப்பாக இந்த கிராமத்தில் இந்து முஸ்லிம் மக்கள் மிக ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
சிலர் இந்தியா ஒரு இந்து நாடு என்று கூறி வருகின்றனர் ஆனால் இங்கு எல்லா மதத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர் உதாரணமாக இது ஒரு இந்து திருவிழா ஆனால் முஸ்லீம் சமூக மக்களும் திருவிழாவில் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். இந்திய மக்களின் ஒற்றுமை இதேபோல் மேலும் தொடர வேண்டும் என விரும்புகிறேன், திருவிழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு அரசியல் வகுப்பு! மாநில மகளிர் கொள்கையில் இவ்வளவு விஷயங்களா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..