சென்னை: சென்னையில் பழைய ஒய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
இது குறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், கு.வெங்கடேசன், அன்பரசு ஆகியோர் பேசும்போது, "ஆளும் திமுக அரசு தேர்தல் காலத்தில் காெடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று மறியல் நடைபெறுகிறது.
சென்னையில் டிபிஐ வளாகத்தில் ஆர்பாட்டத்திற்கு திட்டமிட்டோம். ஆனால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றதா திமுக அரசு டிபிஐ வளாகத்தை காப்பாற்றுகிறது. தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு விட்டது. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை கைது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
காலம் காலமாக பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஜனநாயக வழியில் ஒன்றுக்கூடி போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதிக்காமல் பணியாளர்களையும், ஆசிரியர்களையும் கைது செய்வது என்பது உள்ளபடியே கண்டிக்கத்தக்கது. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தமிழ்நாடு அரசின் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மவுனம் காத்தால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.
இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் தான். கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்கு அறிவித்த போது அனுமதி மறுத்து, சிவானந்தா சாலையில் அனுமதி அளித்தனர்.சேப்பாக்கத்தில் 72 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துப் போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆதரவுத் தந்தார். ஆனால் இன்று ஆளும் கட்சியாக மாறிய பிறகு ஒன்று கூட கூடாது எனக் கூறுகிறார்.
இதனையடுத்து அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்கிறோம். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10 ந் தேதி வேலை நிறுத்த ஆயுத்த மாநாடு நடத்தவுள்ளோம். பிப்.15 ந் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம்,அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 26 ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். அரசு அழைத்துப் பேசினால் மட்டும் போது, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் அதன் பிரதிபலன் 2024ல் தெரியும்.
காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யும் போது எழிலகத்தில் தான் கூடுவோம். அதனையும் தடுத்தால், பணிபுரியும் இடங்களில் போராட்டம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் காவல்துறையைத் திணறடிக்கும் வகையில் மறியல் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். காலம் காலமாக எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, கருணாநிதியின் மகன் ஸ்டாலின் யாராக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அரசு ஊழியர்கள் மீது பாசமழை பொழிவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் யார் எனக் கேட்பது இயல்பாக இருக்கிறது”எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொறுப்பேற்ற உடனே அதிரடியில் இறங்கிய சேலம் ஆட்சியர்.. மலைவாழ் மக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருள் வழங்க ஆணை!