சென்னை: சென்னையில் குருவியாக செயல்பட்ட நபர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த மே 20ஆம் தேதி இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபத்திற்கு வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய நான்கு பேரை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும், சைபர் கிரைம் நிபுணர்கள் ஆய்வு செய்ததிலும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பல்வேறு இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
தற்கொலை படை தாக்குதல்: இவர்கள் குஜராத் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமானது. குறிப்பாக, தற்கொலை படை தாக்குதலிலும் ஈடுபட இருந்ததாகவும், இவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை வழியாக அகமதாபாத்திற்குச் சென்றதால், சென்னையில் உள்ள நபர்களுக்கு யாரேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
சென்னையில் பிடிபட்ட குருவிகள்: தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், விசாரணைக்காக இந்த வழக்கை கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக, இலங்கையிலிருந்து வந்த முகமது நஸ்ரத், முகமது நஃப்ரான், முகமது ஃபரிஸ் மற்றும் முகமது ரசீதின் ஆகியோர் கைது செய்யப்பட்டதில், முகமது நசரத் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது விசாரணையில் அம்பலமானது.
பின்னணி: இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருப்பதும், அதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நஸ்ரத் அடிக்கடி சென்னை வந்து செல்வதும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் உறுதியானது.
குறிப்பாக, கடந்த மூன்று வருடமாக தங்கத்தை சென்னைக்கு கடத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது. நசரத் கடந்த சில நாட்களாக மும்பைக்கு அடிக்கடி பயணம் செய்ததாகவும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பை நஸ்ரத் விரிவுபடுத்தினாரா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயற்சி.. சென்னையில் பிடிபட்ட வங்கதேச இளைஞர்! - FAKE PASSPORT ISSUE