சென்னை: அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், மதுரவாயல், பல்லவன் நகர் பகுதியில் அரிசி மண்டி நடத்தி வருகிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத் தனது நான்கு சக்கர பிக்கப் வாகனத்தை விற்க அதன் ஆவணங்களை மதுரவாயலைச் சேர்ந்த அன்பழகன் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
பல மாதங்கள் ஆகியும் வாகனத்தை விற்று கொடுக்காமலும், தான் கொடுத்த வாகனத்தின் ஆவணங்களைத் திருப்பிக் கொடுக்காமலும் அன்பழகன் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், ஜெயபிரகாஷின் வாகனத்தை போக்குவரத்து போலீசார் மடக்கி சோதனை செய்தபோது அந்த வாகனம் நாகப்பன் என்பவரது பெயரில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயபிரகாஷ், இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அன்பழகனைப் பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
அதில், ஜெயபிரகாஷ் கொடுத்த வாகனத்தின் ஆவணங்களை இவர்கள் ஏற்கனவே வைத்திருந்த வாகனத்தோடு, இணைத்து அந்த வாகனத்தை விற்றது ஜெயபிரகாஷிக்கு தெரியாமல் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்பழகன், பாலமுருகன், வெங்கடாசலபதி, சிவா ஆகிய நான்கு பேரை கைது செய்து மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் வெவ்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியாற்றியது எப்படி சாத்தியம்?- அண்ணா பல்கலை. துணை வேந்தர் விளக்கம்!