சென்னை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழைபெய்து வந்த நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
அப்போது, ஆர்.கே.நகர் வைத்தியநாதன் தெருவில் உள்ள ஒரு மாடி வீட்டின் மூன்று தகர மேற்கூரை சூறைக்காற்றுக்கு பறந்து சென்று அந்த வழியாகச் சென்ற ஆட்டோவில் விழுந்துள்ளது. இதில் ஆட்டோவின் மேற்கூரை கிழிந்து ஆட்டோவை ஓட்டிச் சென்ற தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் சுப்பிரமணிக்கு காயம் ஏற்பட்டது. மேலும் ஆட்டோவில் பயணம் செய்த கோகிலவாணி, செல்வி ஆகிய இரு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மேற்கூரை விழுந்ததில், அப்பகுதியில் உள்ள உணவகம் அருகே நின்று கொண்டிருந்த ஸ்விகி ஊழியரான பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகர மேற்கூரை ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ சேதம் அடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் உரிமையாளர் மாடி வீட்டின் மேற்கூரையை முறையாக கட்டி வைக்காமல் இருந்ததால் காற்றின் வேகத்திற்கு அவை பறந்து அந்த வழியாக சென்ற நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.