தேனி: ஆண்டிப்பட்டி அருகே நாயின் கழுத்தில் கயிறு கட்டி துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் காய்கறி வார சந்தை வளாகத்தில் நாய் ஒன்றின் கழுத்தில் சிலர் கயிறு கட்டி தொங்க விட்டு துடிக்க துடிக்க கொன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் நாயின் கழுத்தில் கயிறை கட்டி, ஒரு கம்பியில் தொங்க விட்டு, துடிக்க துடிக்க கொலை செய்யப்படும் காட்சியை வீடியோவாக எடுத்து, அதனை சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். பார்க்கவே பதைபதைக்க வைத்த அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. கழுத்து இறுக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்த அந்த நாய் அலறியபடி கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டது.
இதையும் படிங்க: கோபிசெட்டிபாளையம் அருகே துப்பாக்கி சூடு: ஒருவர் பலி! போராட்டத்தில் உறவினர்கள்..
வாயில்லா ஜீவனை கொன்ற மனிதத் தன்மையற்ற செயலுக்கு பொதுமக்களும், விலங்குகள் ஆர்வலர்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கடமலைக்குண்டு கால்நடை உதவி மருத்துவர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், மேலபட்டியை கிராமத்தை சேர்ந்த செல்வம் (24), மலைச்சாமி (49), முருகன் (44), பூமிநாதன் (33) ஆகிய நான்கு பேர் சேர்ந்து நாயை கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் மீது விலங்குகளுக்கு தீங்கு ஏற்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில், காய்கறி சந்தை பகுதியில் வளர்ப்பு ஆடுகளை நாய் கடித்ததாக கூறி, அதற்கு தண்டனை கொடுக்கும் விதமாக நாயை பிடித்து கயிறு கட்டி கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.