ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது மகன் சுபாஷ் (24). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், சுபாஷ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மஞ்சு என்பவரைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மஞ்சுவின் தந்தை சந்திரன் இவர்களது காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், தனது மகளை காதல் திருமணம் செய்த சுபாஷை கொலை செய்யும் நோக்கத்தோடு, நேற்றைய முன்தினம் (மார்ச் 6) காலை சுபாஷ், சத்தியமங்கலம் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த தனது தங்கையை பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து வந்த பிக்கப் வேனை சந்திரன் அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தி, சுபாஷை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
அதிவேகமாக வந்த பிக்கப் வேன் மோதியதில், அண்ணன் தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். இதில், சுபாஷுக்கு கால் தொடையில் எலும்பு முறிவும், அவரது தங்கைக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சுபாஷுன் தங்கைக்கு, சத்தியமங்கலத்தில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில், சுபாஷுன் தங்கை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சுபாஷ் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மருமகன் சுபாஷை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டி, மாமனார் சந்திரன் (57) பிக்கப் வேனை ஓட்டி வந்து, சுபாஷ் பைக் மீது மோதி விபத்து போல சித்தரித்ததும், சுபாஷுன் மாமியார் சித்ரா (41) இந்த கொலை திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், சந்திரன் மற்றும் சித்ரா ஆகிய இருவரையும் காரில் தப்பிக்க வைத்ததாக கோவையைச் சேர்ந்த அவர்களது உறவினர்களான அம்மாசைக்குட்டி (45) மற்றும் ஜெகதீஸ் (35) ஆகியோரையும் பவானிசாகர் போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர், கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஈரோடு குற்றவியர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளாக சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்த செவிலியர் மதுரையில் கைது!