சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் மே 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தமாக 16 பேரை இதுவரை செம்பியம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கைதானவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தியதில் அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியது.
குறிப்பாக, பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு நபரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவலில் எடுத்து விசாரணை நடத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிலரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார்திட்டமிட்டு இருந்தனர்.
அதன் அடிப்படையில் எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பொன்னை பாலு, ராமு, அருள் மற்றும் ரவுடிகளுக்கு இடைத்தரகராக செயல்பட்ட ஹரிகரன் ஆகியோரை காவல்துறை வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூவரும் நேரடியாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். ஹரிகரன் என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளுக்கும், இந்த கொலை பின்னணியில் உள்ள ரவுடிகளுக்கும் தரகராக செயல்பட்டுள்ளார்.
ஹரிகரன் மூலமாகதான் ரவுடிகளுக்கு பணம் கைமாறி உள்ளது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்தால் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்பதால் அவரையும் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே காவலில் எடுத்து விசாரித்தபோது ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். ஆனால், அடுத்தடுத்து ரவுடிகள் இதில் கைதாவதால், வேறு ஏதாவது முன் பகையினால் இந்த கொலை நடந்திருக்கலாமா? வேறு ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை செய்ய முக்கிய நபர்களான நான்கு பேரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆந்திராவில் தலைமறைவாகி உள்ள ரவுடி சீசிங் ராஜா; தேடுதல் வேட்டை தீவிரம்!