சென்னை: தமிழ்நாட்டில் முதுகலை மருத்துவ படிப்பில் 2024-25ஆம் கல்வியாண்டில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 89 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 446 பேரில் 221 எம்பிபிஎஸ் மருத்துவர்களின் விண்ணப்பங்களில் போதுமான சான்றிதழ்கள் இல்லை என்பதால் நிராகரிக்கப்பட்டதுள்ளது. மேலும், 44 மருத்துவர்கள் போலியாக தூதரக சான்றிதழ்களை அளித்துள்ளதை தூதரகங்கள் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் 44 மருத்துவர்களிடம் இது குறித்து மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம் கேட்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ், டிஎன்பி ஆகிய படிப்புகளில் முதுகலை மருத்துவப்படிப்பில் 2294 இடங்கள் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் மூலம் நிரப்பப்படுகிறது. அவற்றில் 1094 இடங்கள் மருத்துவத்துறையில் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள 50 சதவீதம் எம்பிபிஎஸ் படித்துவிட்டு, அரசுப் பணியில் இல்லாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதுமட்டும் அல்லாது, தனியார் மருத்துவக்கல்லூரியில் உள்ள முதுகலைப் படிப்புகளில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 89 இடங்கள் உள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 8182 மருத்துவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4139 மருத்துவர்களும் என 12 ஆயிரத்து 321 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 446 மருத்துவர்கள் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். என்ஆர்ஐ ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம் 446 பேரில் 223 பேரின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் சான்றிதழ்கள் முழுமையாக சமர்ப்பிக்காத 221 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர் என அளிக்கப்பட்ட சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிவதற்காக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேஷியா, ஊஸ்டன், குவைத், மெல்பார்ன் உள்ளிட்ட இந்திய தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் 44 மருத்துவர்கள் அளித்த என்ஆர்ஐ சான்றிதழ்கள் போலியானது என கண்டறிந்துள்ளனர். மேலும் சிலரின் சான்றிதழ்கள் வர வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது'.. போராட்டத்தை விலக்கிக்கொண்ட டாக்டர்கள் சங்கம்!
இத்தகைய சூழலில், என்ஆர்ஐ சான்றிதழ்களை போலியாக அளித்த மருத்துவர்களிடம் விளக்கம் கேட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுரேஷ்குமார் கூறும்போது, "முதுகலை மருத்துவ இடத்திற்காக போலி தூதரக சான்று வாங்கும் முறை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர். இதுபோன்ற தூதரக சான்றிதழ் வாங்கிதர தனித்தனியாக ஏஜென்ட்டுகள் இருக்கின்றனர்.
துபாய்க்கு சென்றால் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் செலவில் வெளிநாடு வாழ் இந்தியர் சான்றிதழ் பெற முடியும். ஆனால், முகவர்களிடம் சென்று போலியாக வாங்குகின்றனர். வருங்காலங்களில் இது போன்ற முறைகேடுகளை தடுத்திட மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்ய வேண்டும்.
அப்போதுதான் சம்பந்தப்பட்ட நபர் எப்போது வெளிநாடு சென்றார் எப்போது திரும்பி வந்தார் போன்ற விவரங்கள் இருக்கும். அதன் மூலம் அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் மருத்துவ இடங்களை பெறுவதற்கு தகுதியானவர்களா என்பதை கண்டறிய முடியும். மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி தூதரக சான்றிதழ் அளித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை தூதரகம் எடுக்கும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்