சென்னை: சிஐஐ (CII) எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக, "பாராளுமன்றத்தில் இந்திய இளைஞர்கள் அர்ப்பணிப்பு" என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) எழும்பூரில் துவங்கப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது, “காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தியாவிற்கு மட்டுமல்ல, இது உலகளாவிய பிரச்னை. அவற்றை எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. 27 சதவீதம் ஜிடிபி (GDP - Gross domestic product) இந்தியாவில் இருக்கிறது. விஸ்வபூர்வமான இந்த வளர்ச்சி உலகை ஆள்வதற்கு அல்ல, உலகை இணைப்பதற்கு.
உலகில் மிகப்பெரிய ஜனநாயக பாராளுமன்றம் இந்தியாவுடையது. அதனை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும். உலகளவில் பெண்கள் கல்வியில் முன்னிலை பெறுகின்றனர். பெண்களுக்கு கட்டாயம் அரசியலில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் குழந்தைகளுக்கு செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. எது வேண்டும் என்றாலும் அவர்கள் வலைத்தளங்களில் தேட தொடங்கி விடுகின்றனர். பெற்றோர் பெயர் என்ன என்பதை கூட குழந்தைகள் வலைத்தளங்களில் தேடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு கற்பனை, சிந்திக்கும் திறன் குறைகிறது.
யோகா எந்த மதத்திற்கும் சொந்தமானது இல்லை. உலகில் உள்ள மக்களுக்கானது. உங்களுக்கு சூரிய நமஸ்காரம் பிடிக்கவில்லை என்றால் சந்திர நமஸ்காரம் செய்யுங்கள். யோகா செய்வது மோடிக்கு மட்டும் நல்லது இல்லை, உங்கள் பாடிக்கு நல்லது” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “மாணவர்கள் கல்வி, வேலை, குடும்பம் என மட்டும் இருந்துவிடாமல் அரசியலிலும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். மாணவர்கள் அரசியலில் பங்கெடுத்தால் மட்டுமே நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியும். பருவநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. புயல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றின் தாக்கம் மாறிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசுகள் உரிய கொள்கைகளை உருவாக்க வேண்டும், வருங்கால தலைமுறையினரை காக்க இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஸ்விக்கி, சொமாட்டோ மூலம் மது விற்பனை? அமைச்சர் முத்துசாமி பதில்!