சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது.
இதனால் செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதனமை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 25ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் 40வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011-2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, 1 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில்பாலாஜியை 2023ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் வேணாம்னா, அப்போ டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்வீங்களா''..? தமிழிசை கேள்வி