திருச்சி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் ஒரு சில தொகுதியில் குறைந்த வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்கும் அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், திருச்சி வயலூர் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கட்சிகளுக்குள் இருந்த மனக்கசப்புகள் மற்றும் அரவணைப்புகளின் வெளிப்படை தான் இந்த தேர்தலின் முடிவுகள். அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒன்றிணைந்து செயல்பட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடும் போது, ஓபிஎஸ் அணியிலிருந்து நான் வெளியேறி விட்டேன். ஓபிஎஸ் வெற்றி பெற்றிருந்தாலும், தோல்வி அடைந்தாலும் அது எனக்கு மகிழ்ச்சியை தராது.
அனைவரும் ஒன்றிணைந்து யாரை தலைவராக நிறுத்தினாலும், அனைவரும் தயாராக இருக்கிறோம். ஆனால், தொண்டர்களை ஒன்று கூட வைக்க வேண்டும். 1975-ல் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது, சிக்கல் தீர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி எம்.ஜி.ஆர் தீர்வு கண்டார். இப்போது, அதுபோன்று ஒரு குழுவை ஏற்படுத்தி உரிய தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக கட்சியின் கொள்கைகளை எம்ஜிஆர் வகுத்தார். கட்டுப்பாடுகளை ஜெயலலிதா வகுத்தார். அதன்படிதான் செயல்பட வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இனி அவர்களுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். கட்சியை வளர்த்தவர்களுக்குதான் தோல்வியின் வலி தெரியும்.
அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல. ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம். கட்சியை ஒன்றுபடுத்தும் சக்தி படைத்தவர்கள் யாராயினும், அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோம். சசிகலா இரண்டு ஆண்டுகளாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை தவிர, இணைப்பு முயற்சிக்கு வேறு என்ன நடவடிக்கை எடுத்தார்?
டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்கி சென்றுவிட்டார். அவர் எப்படி அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து பேச இயலும்? அவர் கட்சியை வேண்டுமானால் அதிமுகவில் இணைத்துக் கொள்ளலாம். அதிமுக தொண்டர்கள் மீண்டும் ஒண்றினைய வேண்டும். எனவே, இது தொடர்பாக வரும் திங்கள் அன்று முன்னாள் முதலமைச்சர்களான அதிமுகவை வளர்த்த ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரது கல்லறைக்குச் சென்று பிரார்த்தனை செய்ய உள்ளேன்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: "விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை" - பிரேமலதா விஜயகாந்த் அடுக்கும் காரணங்கள்! - Premalatha Vijayakanth