திண்டுக்கல்: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. கட்சியின் மாநில தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்களும் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் முகமது முபாரக்-கை ஆதரித்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இன்று சிறுகுடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆண்ட பாரதிய ஜனதா கட்சி நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
பெட்ரோல் டீசல், சமையல், எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இனிமேல் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாது. அதற்குப் பதிலாக வீட்டில் உள்ளவர்களுக்குத் தங்கத்தின் பெயரில் தங்கராசு, தங்கம் என்று பெயர் மட்டும் தான் வைக்க முடியும்.
மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் 1 பவுன் தங்கத்தின் விலை 1 லட்ச ரூபாயாக விலை உயர வாய்ப்புள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தினந்தோறும் மக்களைக் காப்பாற்ற அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் முகமது முபாரக்-கிற்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார். இதில் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் புகார் - Lok Sabha Election 2024