சென்னை: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான ஜி.எம்.அக்பர் அலி, அருணா ஜெகதீசன், D.அரிபரந்தாமன், P.R.சிவக்குமார், C.T.செல்வம், எஸ்.விமலா மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி D.Y.சந்திர சூட் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில், நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்துப் பல கேள்விகள் எழுவதாகவும், பல புகார்கள் குறித்து கவனத்திற்குக் கொண்டு வந்தும் அது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் இருந்ததாகவும், அதற்கெதிராக குறைந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கை விவரங்கள் முறையாக வெளியிடப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் குதிரை பேரம் உள்ளிட்ட அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குடியரசுத்தலைவருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதில் உடனடியாக தலையிடத் தயாராக இருக்க வேண்டுமெனத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் காரணமாக ஏதேனும் அரசியல் சாசன சிக்கல்கள் எழுந்தால் அதைச் சரி செய்ய ஐந்து நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!