ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப்பகுதியை ஒட்டியுள்ள புதுகுய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி. வனப்பகுதியை ஒட்டியுள்ள இவரது தோட்டத்தில் 50 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஆக.17) காலை வனத்தில் இருந்து வழிதவறி வந்த ஆண் காட்டெருமை தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் கிணற்றில் இருந்த 10 அடி நீரை மோட்டார் மூலம் அகற்றினர்.
பிறகு காட்டெருமையை மீட்கும் முயற்சி செய்த போது தீயணைப்பு வீரர்கள் இடம் மாடு முரண்டு பிடித்துள்ளது. இதனையடுத்து காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி மீட்கும் நடவடிக்கையில் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து துப்பாக்கி மூலம் காட்டெருமைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி, பாதுகாப்பாக காட்டெருமையை மேலே கொண்டு வந்தனர். சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட காட்டெருமை உடல் நலனைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், மாடு நலமுடன் இருப்பதை உறுதி செய்தார்.
தொடர்ந்து காட்டெருமை லாரியில் ஏற்றப்பட்டு பண்ணாரி அடர்ந்து காட்டுப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. காட்டெருமையை மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்ட வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை.. தந்தை உட்பட 4 பேர் கைது!