நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காலில் காயத்துடன் ஐந்து நாட்களுக்கு மேல் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்து வந்தது. இதனை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டுகள் வைத்து இருந்தனர். இந்த நிலையில், தற்போது சிறுத்தை வனத்துறை வைத்து கூண்டில் சிக்கியது. இதனையடுத்து, வனப்பகுதியில் சிறுத்தை விடுவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வன விலங்குகளின் நடமாட்டம் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கடந்த ஐந்து நாட்களாக காலில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வருவதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தையைக் கண்காணித்து வந்தனர். மேலும், சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இரு இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு தேவர் சோலை அருகே உள்ள தேவன் எஸ்டேட் அஞ்சு கோயில் பகுதியில் வைத்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது.
சிறுத்தை பிடிபட்ட தகவல் அறிந்த கூடலூர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, ஏசிஎப் கருப்பையா, கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வனவர் குமரன் தலைமையிலான வனத்துறையினர், தேவன் எஸ்டேட் அஞ்சு கோயில் பகுதிக்குச் சென்று பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக முதுமலை வனப்பகுதியை வனத்துறையினர் தேர்வு செய்தனர். இதன்படி, தற்போது சிறுத்தையை வனத்துறை வாகனம் மூலம் முதுமலை வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்துள்ளனர். அப்போது, கூண்டைத் திறந்தவுடன் சிறுத்தை மின்னல் வேகத்தில் வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றது. இதனால் கூடலூர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல்.. திருவாரூர் விவசாயிகள் வேதனை! - Cotton Farmers Tiruvarur