திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பத்தாப்பேட்டை பகுதியில் துக்க நிகழ்சிக்கு வந்த உறவினர்களுக்கு, சுபாஷ் என்பவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் இட்லி வாங்கி வந்துள்ளார். பின்னர், வாங்கி வந்த இட்லியை 3 குழந்தை உட்பட 8 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென வாந்தி வந்துள்ளது. பின்னர், வாங்கிவந்த இட்லியில் பார்த்த போது, அதில் பல்லி செத்துக் கிடந்தது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இட்லியை சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 8 பேரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, உணவகத்தில் வைக்கப்பட்ட சட்டினியில் பல்லி இருந்ததாக சுபாஷின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி இளங்கோ தலைமையிலான அதிகாரிகள், உணவகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், அந்த உணவகத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, 4 நாட்கள் உணவகத்தை திறக்கக்கூடாது எனவும், உணவகத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பிரபல தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை; மதுரையில் பகீர் சம்பவம்!