கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான வடசேரி, கணேசபுரம், பார்வதிபுரம், ராமன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள் மற்றும் ஃபார்மலின் கலந்து கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்தப் புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும்
மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமார பாண்டியன், சங்கர நாராயணன், நீர்வளத்துறை ஆய்வாளர் மரிய ட்ரான்ஸிஸ்கோ விவின் மற்றும் மேற்பார்வையாளர் கார்த்திபன் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சத்யராஜ், மகாதேவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் கணேசபுரம், வடசேரி மீன் சந்தைகளில் திடீரென விற்பனை செய்யப்படும் மீன்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் மற்றும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மீன்கள் பதபடுத்தி வைக்கப்பட்டு இருந்த மீன்கள் என அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மீன்கள் மீது ஃபார்மலின் தடவப்பட்டு இருக்கிறதா என்றும் மீன் விற்பனைக்கு தகுதியானதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு சில வியாபாரிகள் உணவு பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத அழுகி போன மீன்களை விற்பனை செய்ய வைத்து இருந்தது தெரிய வந்தது.
அழுகிய நிலையிலும், விற்பனைக்கு தகுதியற்ற மீன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின் போது உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற கெட்டுப்போன சுமார் 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மீன்கள் சுண்ணாம்பு தூள் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி கிடங்கிற்கு கொண்டு சொல்லப்பட்டு அழிக்கப்பட்டது.
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் ஃபார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் எதுவும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அழுகிப்போன மீன்கள் மற்றும் ஃபார்மலின் கெமிக்கல் கலந்து விற்கப்படுவது தெரிந்தால் மீன் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: புலிகளை மனிதர்களாகிய நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? - தாளவாடி வனச்சரக அலுவலர் கூறுவது என்ன?