சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை இன்று பெருங்களத்தூரை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் (25) கத்தியால் குத்திய சம்பவம் மருத்துவர்களுக்கிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷ் தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்றவரை மடக்கி பிடித்த மருத்துவ பணியாளர்கள் அவரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைகை செல்வன், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆகியோர் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், '' சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு உதாரணமாக கிண்டி பண்ணோக்கு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்துவரும் நிலையில் அதனை தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் முதலமைச்சருடன் நடைபயிற்சி செல்லவே விரும்புவதாக குறை கூறிய அவர்கள், முதலமைச்சர் மா. சுப்பிரமணியத்தை பதவி நீக்கம் செய்து சுகாதாரத் துறையை காப்பாற்ற வேண்டும்'' என்றனர்.
இதையும் படிங்க: மருத்துவருக்கு கத்திக்குத்து; 'திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா?' - தலைவர்கள் கண்டனம்
தொடர்ந்து பேசியவர்கள்; '' கத்தியால் குத்தியவர் ஆயுதத்துடன் வந்துள்ளார். அவரை ஏன் சோதனை செய்யவில்லை.. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை.. மருத்துவமனைக்கு கருணாநிதி பெயர் வைத்தால் மட்டும் போதுமா? மருத்துவர்களுக்கு பாதுக்காப்பு அளிக்க அரசு தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட மருத்துவர் ஏற்கனவே இருதய பாதிப்பிற்கு பேஸ்மேக்கர் பொருத்தியுள்ளார். காவல்துறையால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால் அரசு என்ன செய்கிறது என்றும் அரசு மீதும், துணை முதலமைச்சர், மருத்துவத் துறை அமைச்சர் மீதும் நம்பிக்கை இல்லாமல் மருத்துவர்கள் போராடுகின்றனர்'' என்றும் தெரிவித்தனர்.
சென்னை கிண்டிஅரசு மருத்துவமனையில்,
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 13, 2024
புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல்… pic.twitter.com/cYtOx8ByYX
எடப்பாடி பழனிசாமி கண்டனம்: முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது எக்ஸ் பக்கத்தில், '' ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன.
அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இனியாவது முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்