சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை கொடிகட்டி பறந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.
இப்பகுதிகளில் வளர்ந்துவரும் ரவுடிகள் இதுபோன்ற கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவ்வப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபடும் தரப்பிற்கு இடையே மோதல் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. காவல் துறையினர் இந்த விவகாரங்களில் கண்டிப்பு காட்டாமல் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
கழுத்தறுக்கப்பட்டு படுகொலை: இந்த நிலையில், சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (23) மற்றும் ஜில்லா தமிழரசன் (23) ஆகிய இரண்டு பேர் நேற்று முந்தினம் அதிகாலை மர்ம நபர்களால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தாம்பரம் அருகே பெருங்களத்தூர் அடுத்துள்ள, குண்டுமேடு சுடுகாடு மற்றும் உரக்கிடங்கு அருகே, ஆட்டோ ஓட்டுநர் ஹரி என்பவர் அண்ணாமலை மற்றும் ஜில்லா தமிழரசன் ஆகிய இருவரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்துள்ளனர்.
அந்த இளைஞர்களுக்கும், கொலை செய்யப்பட்ட இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அண்ணாமலை, ஜில்லா தமிழரசன் ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பீர்க்கன்காரணை போலீசார் உடல்களை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டனர்.
தனிப்படை: முதற்கட்ட விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். தாம்பரம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் உத்தரவின்படி, கூடுவாஞ்சேரி உதவி ஆணையாளர் மற்றும் பீர்க்கன்காரணை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடினர்.
செல்ஃபோன் சிக்னல் மூலம் கொலையாளிகள் கூடுவாஞ்சேரி அருகே இருப்பதை தெரிந்துக்கொண்ட போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, கொலையில் சம்மந்தப்பட்ட 3 பேர் போலீசை கண்டவுடன் அங்கிருந்து தப்பித்து ஓட முற்பட்டு மூன்று பேரும் பள்ளத்தில் தவறி விழுந்தனர். இதில் கை, கால் முறிவு ஏற்பட்டதால் போலீசாரிடம் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டனர். உடனடியாக போலீசார் அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதல் சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சையளிக்க ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கஞ்சா விற்பனை: சிகிச்சை முடித்தபின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது; கைது செய்யப்பட்ட நபர்கள் பெருங்களத்தூர் பகுதியை சோனு (26), விஜய் (26), ஆரிஃப் (24) ஆகிய மூன்று பேரும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட அண்ணாமலை கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் வந்த பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அண்ணாமலை சோனுவின் மனைவி குறித்து தகாத வார்த்தைகளில் அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோனு, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, சம்பத்தன்று இரவு 7 மணி அளவில் சோனு, அண்ணாமலை மற்றும் ஜில்லா தமிழரசனிடம் பேச வேண்டும் எனக் கூறி விவேக் நகர் பகுதிக்கு வரும்படி அழைத்துள்ளார்.
அதன் பிறகு சோனுவும் அவரது நண்பர்களும் சேர்ந்து இருவரையும் தாக்கி பின்னர் ஹரி என்பவரின் ஆட்டோவில் இருவரையும் ஏற்றி, அதில் வைத்து அடித்து கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு உடல்களை குண்டு மேடு சுடுகாட்டு பகுதியில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றதாக ஒப்புக்கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் இடமாற்றம்: பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்த கணேஷ் பாண்டியன் பணிக்கு வந்த பின்பு காவல் நிலைய எல்லையில் இதுவரை ஐந்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 31 ஆம் தேதி காதல் தகராறில் ஜீவா என்ற இளைஞர் குண்டுமேடு பகுதியில் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அதன் பின்பு மார்ச் 3ம் தேதி சுமேஷ் என்பவர் நண்பருடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக தலையில் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். கடந்த மாதம் முடிச்சூர் பகுதியில் இரு கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட மோதலில் விக்கி என்கிற விக்னேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் போதைப் பொருள் விற்பனையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பீர்க்கன்காரணை காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் கணேஷ் பாண்டி சேலையூர் காவல் நிலையத்திற்கு குற்றப் பிரிவு ஆய்வாளராக தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வேலூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ராஜா... பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்!