தென்காசி: தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து இன்று தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைக் கனடா நாட்டு அதிபர் பாராட்டுவதாகவும், அந்த நாட்டிலும் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாகவும் கூறினார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என கூறி அதே போல் முதலமைச்சர் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதாகவும் அவர் பேசினார்.
ஆனால், இன்னும் சில குளறுபடிகள் உள்ளது. ஒரு கோடியே 60 லட்சம் நபர்கள் விண்ணப்பித்த நிலையில் ஒரு கோடியை 18 லட்சம் மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது. ஆனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மத்திய அரசு உரிய நிதி வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் கொடுக்காத மத்திய அரசை ஓட ஓட விரட்ட வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் தகுதி வாய்ந்த அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் உரிமை வழங்கப்படும்.
தென் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் மக்களை வந்து சந்திக்காத பிரதமர் தற்போது ஓட்டுக்காக மக்களைச் சந்திக்க வருகிறார். மக்கள் அனைவரும் பாரத பிரதமரை 29 பைசா என அழைக்க வேண்டும். மேலும் தென்காசி மாவட்டத்தில் மட்டும் மூன்றரை லட்சம் குடும்பத் தலைவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கி வருவதாகவும், தமிழ்நாடு உரிமை பாதுகாக்கவும், தமிழ்நாட்டிற்கு உரிய நிதி கிடைக்கவும் அதற்கான பிரதமரை உருவாக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு உதயநிதி தனது காரில் திரும்பிய போது கழுகுமலை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படை காவல்துறையினர் அமைச்சர் உதயநிதி காரை சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: 'இந்தியா கூட்டணி' கொங்கு மண்டல வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை! - Coimbatore Rahul Gandhi Campaign