மயிலாடுதுறை: நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு சமீபத்தில் நடைபெற்று முடிவுகளும் வெளியாகின. இந்த நிலையில், பூக்கடை தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவில் உள்ள தேரழுந்தூரைச் சேர்ந்தவர் சுபலெட்சுமி (19). இவர் 2023-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்ற நிலையில், தன் சிறு வயதிலிருந்து மருத்துவர் கனவை மெய்ப்படுத்த நீட் தேர்வு எழுதினார்.
இதில் அவர் 513 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். ஆனால், அந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடம் கிடைக்காததாலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்க பணம் இல்லாததாலும் அந்த முறை நீட் மதிப்பெண்கள் அவருக்கு கல்லூரிக்கு போக உதவில்லை. ஆனால், சுபலெட்சுமி கவலையில் முழ்கிவிடாமல், மறு முறையும் தயாராகி நீட் தேர்வை எழுதி இருக்கிறார். இந்த முறை 720க்கு 639 மதிபெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
நீட் தேர்வுக்குத் தயாரான சுபலெட்சுமி: முதல் முறை தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற கவலை இருந்தாலும், இந்த முறை எப்படியாவது அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற வேண்டும் என உறுதியுடன் படிப்பில் களமிறங்கிய சுபலெட்சுமி, கடந்த ஒரு ஆண்டாக ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நீட் பயிற்சிக்கு பணம் கட்டி சேர்ந்து, இரவு பகல் பாராமல் படித்துள்ளார்.
அதன் விளைவாக, தற்போது வெளியான நீட் தேர்வு முடிவில் சுபலெட்சுமி அகில இந்திய அளவில் 39,836வது இடத்தைப் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த முறை நிச்சயமாக அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
மேலும், நீட் தேர்வில் கடின உழைப்பால் அதிக மதிப்பெண்கள் பெற்ற சுபலெட்சுமி நீட் தேர்வு குறித்து கூறுகையில், “நீட் தேர்வு இருந்ததால் மட்டுமே எனது மருத்துவர் கனவு சாத்தியமானது” என தெரிவித்துள்ளார். மேலும், தன்னம்பிக்கையுடன் படித்தால் அனைவரும் மருத்துவராகலாம் என சக மாணவிகளுக்கு சுபலெட்சுமி அறிவுரை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப்படிப்பு; கட் ஆப் மதிப்பெண் வெளியீடு!