சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அம்மழை அவ்வப்போது விட்டு விட்டு, இரவு முழுவதும் நீடித்ததால், சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்து, தத்தளித்துக் கொண்டு இருந்தன.
அதில் வெளிமாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த மதுரை, டெல்லி, அயோத்தி, லக்னோ, கோவை, ஹைதராபாத், ராஞ்சி, மும்பை, கோழிக்கோடு, கவுகாத்தி, துபாய், பக்ரைன், ஃபிராங்பார்ட் உட்பட 15 விமானங்கள் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன. இருந்தாலும், வானிலை சீராகவில்லை.
அதனால், 269 பயணிகளுடன் துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 232 பயணிகளுடன் பகரைனிலிருந்து வந்த ஃகல்ப் ஏர்வேஸ் விமானம், 172 பயணிகளுடன் கவுகாத்தியிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 168 பயணிகளுடன் மும்பையிலிருந்து வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்களும் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. மற்ற விமானங்கள் தொடர்ந்து வானில் வட்டமடித்து பறந்தபடி இருந்தன.
அதேபோல் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா, கோவை, மங்களூரு, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, துபாய், பஹ்ரைன், குவைத், தோகா, ஃபிராங்பார்ட், இலங்கை உள்ளிட்ட 16 விமானங்கள் பல மணி நேரங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இதற்கிடையே அவ்வப்போது சூறைக்காற்றும் மழையும் சிறிதளவு ஓய்ந்தவுடன் வானில் வட்ட மடித்துப் பறந்து கொண்டு இருந்த விமானங்கள், அவசர அவசரமாக ஒன்றன்பின் ஒன்றாகச் சென்னையில் தரையிறங்கின. அதேபோல் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்ட விமான 4 விமானங்களும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் சென்னைக்கு திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு சென்னையில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் 15 வருகை விமானங்கள் மற்றும் 16 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: நேபாளத்தில் ஆற்றில் பேருந்துகள் விழுந்து 66 பேர் மாயம்! என்ன நடந்தது?