சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், இன்று 4 மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
லண்டனிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு வர வேண்டிய இந்த விமானம் இன்று காலை 8 மணிக்கு தான் சென்னை வந்தது. இதை அடுத்து, இந்த லண்டன் விமானம் 4 மணி நேரம் தாமதமாக காலை 9:30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றது.
அதுபோல, சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 11.50 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. இதை அடுத்து, இந்த விமானம் சுமார் 4 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க: "பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கியது தவறு" - நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலை ரத்து செய்த நீதிமன்றம்!
இதனால் இந்த 2 விமானங்களிலும் பயணிக்க இருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரம் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து விமானங்களின் நிர்வாகம் சார்பில், பயணிகளுக்கு விமானங்கள் தாமதம் குறித்து ஏற்கனவே குறுந்தகவல்கள் அனுப்பி வைத்திருந்தோம். ஆனால், அந்தத் தகவல் கிடைக்காத பயணிகள் முன்னதாகவே சென்னை விமான நிலையத்தில் வந்து காத்திருந்தனர் என்று தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்