கோயம்புத்தூர்: கோவையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளுக்கு விமான போக்குவரத்து இருந்து வருகிறது. இதேபோல மற்ற நாடுகளுக்கும் விமான போக்குவரத்து கோவையில் இருந்து துவங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட வருடங்களாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கோவை - அபிதாபி இடையே இன்று (ஆக.10) முதல் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று (ஆக.10) காலை சுமார் 163 பயணிகளுடன் இண்டிகோ விமானம் அபுதாபியில் இருந்து கோவைக்கு விமான நிலையத்திற்கு வந்தது.
அப்போது, இந்த விமானத்துக்கு கோவை விமான நிலைய தீயணைப்பு படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று (ஆக.10) காலை 7.40 மணியளவில் இண்டிகோ விமானம் கோவை விமான நிலையத்தில் இருத்து அபுதாபிக்கு தனது விமான சேவையை இயக்கியது.
இந்த நிலையில், வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் கோவையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவையானது வழங்கப்பட இருப்பதாகவும், குறைந்த அளவில் சரக்கு சேவையும் இந்த விமானத்தில் உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தொழில் துறையினர் கூறுகையில், "கோவையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை வேண்டும் என்பது நீண்ட வருடம் கோரிக்கையாக உள்ளது. தற்போது துவங்கப்பட்டுள்ள இந்த கோவை - அபிதாபி இடையேயான விமான சேவை மூலம் கோவையைச் சேர்ந்த தொழில்துறையினர் மிகுந்த பயன் அடைவார்கள்.
மேலும், இந்த விமான சேவை தொழில் துறையினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டும் அல்லாது, வியாபாரத்திற்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்லக்கூடியவர்களுக்கு இந்த விமான சேவை உபயோகமாக இருக்கும். அதே சமயம் இன்னும் சில நாடுகளுக்கும் கோவையில் இருந்து விமானங்கள் இயக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கருப்பு சட்டை அணிந்து வந்த மாணவர்களுக்கு தடை.. கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்தது என்ன?