திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித் திருவிழா 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் திருவிழாவில் காலை, மாலை இருவேளைகளிலும்சுவாமிய அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்துருளி திருவீதி உலா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்றிரவு 7ம் திருநாளையொட்டி சுவாமி நெல்லையப்பர் வெள்ளிக் குதிரை வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏழாம் திருநாளையொட்டி நடராஜ பெருமாள் தங்கத்தட்டி சப்பரத்தில் சிவப்பு சாது திருக்கோளத்தில் எழுந்துள்ளனர். பின்னர் நடராஜபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்வாடச உபச்சார மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜ பெருமான், சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு குடவறைவாயில் தீபாராதனை நடத்தப்பட்டு பஞ்சமூர்த்திகளுடன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. ஆனித் தேரோட்டம் என்பது நெல்லையின் புகழ்பெற்ற திருவிழாவாகும் எனவே நாளை நெல்லை மட்டுமல்லாமல் பல ஊர்களில் இருந்து மக்கள் தேர் திருவிழாவை காண குடும்பத்தோடு வந்து செல்வார்கள். காலை 7 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும் தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் சிவ கோஷம் விண்ணை முழங்க தேர் வலம் வரும்.
இதற்கிடையில் தேர்திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாநகரம் டவுன் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. தென்காசியில் இருந்து நெல்லை வரும் பேருந்துகள் கனரக வாகனங்கள் அனைத்தும் கண்டியபேரி விலக்கு தச்சநல்லூர் வண்ணாரப்பேட்டை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்று புதிய பேருந்து நிலையத்திலிருந்து தென்காசிக்கு செல்லும் பேருந்துகள் டவுன் ஆர்ச் நெல்லை கண்ணன் ரோடு காட்சி மண்டபம் வழியாக செல்ல வேண்டும் எனவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
சாதி ரீதியான அடையாளங்களுக்கு தடை: அதேபோல் இன்று மாலை 6 மணி முதல் நாளை இரவு வரை டவுன் பகுதிக்குள் பேருந்துகள் தவிர கனரக வாகனங்கள் அனைத்தும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர் திருவிழா முன்னிட்டு மாநகர காவல் துறை சார்பில் நாளை 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். கூட்டத்தை கண்காணிக்க 147 சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேலும் தேரோட்டத்தின்போது சாதிரீதியான பனியன்கள், கயிறுகள், கொடிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டு தேர் திருவிழாவின்போது சில இளைஞர்கள் சாதி அடையாளத்துடன் கூடிய கொடியை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. எனவே சாதி ரீதியான அடையாளங்களை பயன்படுத்த காவல்துறை தற்போது தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.