பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் கிழக்கு தெருவைச் சேர்ந்த சுரேஷ் (39) என்பவர், தான் வங்கியில் வைத்திருந்த நகையை மீட்டு தனியார் நகைக்கடையில் அடகு வைப்பதற்காக அந்த நகைக்கடை உரிமையாளரிடம் ரூபாய் 6 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை கடனாக பெற்றுள்ளார்.
அதன் பின்னர், நகையை மீட்க வங்கிக்குச் சென்றபோது நகையை மீட்க நேரம் கடந்து விட்டது என வங்கி ஊழியர்கள் கூறியதாகவும், பின்னர் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வரும்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தன்னிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றதாகவும், அதனை மீட்டுத் தருமாறும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின் படி பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வளவன் வழிகாட்டுதலில், பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது வேப்பந்தட்டை அடுத்த பிரம்மதேசம் கிராமம் எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த சுகன்ராஜ் (27), சூர்யா (23), சூர்யா (24), சுதாகர் (25) மற்றும் தேவையூரைச் சேர்ந்த முகமது இம்தியாஸ் என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருட திட்டம் தீட்டியது போலீசாரிடம் புகார் அளித்த சுரேஷ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் பணம், 3 டாடா ஏஸ் வாகனம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் தலைமறைவாக உள்ளாதாகக் கூறப்படும் நிலையில், அவரையும் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: பேனர் வைப்பத்தில் இருதரப்பு மோதல்.. குளித்தலை பகுதியில் குவிந்த போலீசார்!