மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், செல்போன் வீடியோ காலில் நண்பரிடம் மன்னிப்பு கேட்க வைத்து ஐடிஐ மாணவரை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் மேலவீதியில் உள்ள தனியார் ஐடிஐ மாணவர்கள் என்று சொல்லப்படும் சிலர், வீடியோவில் சீருடை அணிந்த மாணவனை மாறி மாறி முகத்தில் தாக்கியவாறு வீடியோ காலில் உள்ள நண்பரிடம் மன்னிப்பு கேட்க வைத்து தொடர்ந்து தாக்கியுள்ளனர். அடித்தது போதுமா சிங்கம், இன்னும் அடிக்கவா? எனக்கு பத்தலை என்று கூறியவாறு மாணவரை இருவர் தாக்குகின்றனர்.
ஐடிஐ மாணவரை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ வைரலான நிலையில், இச்சம்பவம் குறித்து தாக்குதலில் ஈடுபட்ட 5 மாணவர்களை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து, மாணவர்கள் அனைவரும் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால், அவர்களை நாகப்பட்டினம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் சிறுவர் சிறையில் அடைத்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், மாயூரநாதர் ஆலயம் மேலவீதியில் உள்ள தனியார் ஐடிஐயில் படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஒரு மாணவரின் நண்பர்கள் 5 பேர் இணைந்து, முன் விரோதம் உள்ள மாணவரை முகத்தில் கடுமையாக தாக்கியதோடு, வீடியோ காலில் நண்பரிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளது தெரியவந்தது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சதுரங்க வேட்டை பாணியில் தேனியில் சம்பவம்.. ரூ.3.40 கோடி போலி நோட்டுகள் பறிமுதல்!