கோயம்புத்தூர்: கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் குடோன் ஒன்றில் யானை தந்தங்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருப்பதாகவும், விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அந்த தனியார் குடோனில், வனத்துறை சிறப்பு குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குடோனில் இருந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், டிராவல் பேக் ஒன்றில் இரண்டு யானை தந்தங்களை விற்பனைக்காக வைத்திருந்ததும், தந்தங்களை விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து, அங்கிருந்த செந்தில்வேல், சுமதி, ஆஸாத் அலி, நஞ்சப்பன், சந்தோஷ், கோவிந்தராஜுலு ஆகிய ஐந்து பேரை கைது செய்து தந்தங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை 5 பேரையும் கோவை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில், செந்தில் வேல் என்பவரது வீட்டில் கடந்த 40 ஆண்டுகளாக யானை தந்தம் இருந்ததாகவும், குடும்ப சூழல் காரணமாக அதனை விற்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சந்தேகத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவன்! பிள்ளைகளின் நிலை என்ன?
மேலும், இதற்காக சுமதி என்பவரை தொடர்பு கொண்ட போது, அவர் மூலம் சில இடைத் தரகர்களைக் கொண்டு யானை தந்தத்தை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், டெல்லியை சேர்ந்த ரயான் என்பவரும், காவல்துறையில் பணியாற்றும் ஆரோக்கியம் ஆகியோரும் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனால், தலைமறைவாக உள்ள ரயான் மற்றும் ஆரோக்கியத்தை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் அவர்களிடம் இருந்து இரு தந்தங்களை கைபற்றியதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அண்மை காலமாக கோவை பகுதியில் யானை தந்தம் கடத்துபவர்கள் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்