வேலூர்: வீட்டின் வெளியே பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் புகுந்த, விஷம் கொண்ட 5 அடி கண்ணாடி விரியன் பாம்பை, பாம்பு பிடிக்கும் நபர்கள் மூலமாக பத்திரமாகப் பிடித்து, காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது. இதில், தீயணைப்புத் துறையினர் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
வேலூர், பூந்தோட்டப் பகுதியில் உள்ள சேவை முனுசாமி ராஜம்மாள் வீதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் நேற்று (டிச.02) திங்கட்கிழமை இரவு வீட்டிற்கு வெளியில் வந்தபோது, பாம்பு ஒன்று வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் புகுந்துள்ளதைப் பார்த்துள்ளார். அதனைக் கண்டு அச்சமடைந்த சுகுமார், வேலூர் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கனமழையால் தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி..மீட்பு பணியில் ராணுவம்!
அப்போது, தீயணைப்புத் துறையினர் வீட்டிற்கு வெளிப் பகுதிகளில் இருக்கும் பாம்பை பிடிப்பதற்கு வர முடியாது எனவும், நாங்கள் பாம்பு பிடிக்கும் நபரின் தொலைப்பேசி எண்ணை உங்களுக்கு வழங்குகிறோம், நீங்கள் அவரை தொடர்பு கொண்டு பாம்பை பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அலட்சியமாகப் பதில் அளித்ததாக சுகுமார் தெரிவித்துள்ளார். அதனால், சுகுமார் வேறு வழியின்றி தீயணைப்புத் துறையினர் கொடுத்த நபருக்கு அழைத்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து, அதிக விஷம் கொண்ட ஐந்து அடி கண்ணாடி விரியன் பாம்பை பிடித்துள்ளார். தொடர்ந்து, பாம்பை பத்திரமாக காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளது என சுகுமார் தெரிவித்துள்ளார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாம்பை பிடிப்பதற்கு தீயனைப்புத் துறையினர் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.