தூத்துக்குடி: தூத்துக்குடி, தருவைக்குளம் மீனவ கிராமத்தில் தொடர்ண்டு ஏற்பட்ட்டுவரும் கடல் சீற்றம் காரணமாக 20 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் முற்றிலுமாக சேதமாகி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் மீன்பிடித் தொழிலை நம்பி 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தருவைகுளம் கடற் பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 40 முதல் 70 மீட்டர் வரை அதாவது 200 அடி வரை கடல் கரையை தாண்டி வந்துள்ளது. இதன் காரணமாக கடற்கரை ஓரமிருந்த மீனவர்களின் ஏலக் கூடம், மீனவர்கள் வலை பின்னும் கூடம் மற்றும் படகு பழுது பார்க்கும் பகுதி சேதமடைந்துள்ளது.
தொடர்ந்து, கடல் சீற்றம் அதிகரித்து வருவதால் கடற்கரை அருகே உள்ள மீனவர்களின் சங்க கட்டடம் மற்றும் மீனவர்களின் வலை பின்னும் கூடம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக சுமார் 50 அடி தூரத்திற்கு மீனவர்கள் தங்கள் சொந்த செலவில் கருங்கற்களைப் போட்டுப் பாதுகாத்து வருகின்றனர்.
மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தில் படகுகளை கட்டி மீனவர்கள் இறக்கவோ மேலும் ஐஸ் போன்றவற்றை ஏற்றவோ முடியாத அளவு கடல் சீற்றம் ஏற்படுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக மீன் இறங்கு தளத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் கட்டப்படும் பொழுது கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு நாட்டுப்படகுகள் சேதமாகி வருகின்றன.
இதையும் படிங்க: ரூ.6 கோடி அளவுக்கு மணல் கொள்ளை? ட்ரோன் காட்சிகளுடன் புகார்.. புதுக்கோட்டையில் அரசின் நடவடிக்கை என்ன?
இதன் காரணமாக ஆண்டுதோறும் 20 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் முற்றிலுமாக சேதமாகி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தருவைகுளம் மீனவ கிராமத்தை பாதுகாக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்,"கடல் கால சூழ்நிலை காரணமாக கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனை அரசு முறையாக பராமரிக்க வேண்டும் அரசு மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி பாதுகாக்க தவறியதால் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி, பொருட் செலவு, படகுகள் ஒன்றோடு, ஒன்று மோதி கடும் சேதாரமாகிறது.
இதுவரை சம்பந்தபட்ட அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை. 1 கோடி ரூபாய் வரை படகுகள் உருவாக்க செலவு ஆகும். இந்த கடல் அரிப்பினால் படகுகள் கடலில் விழும் அபாயம் உள்ளது. ஆகவே, அரசு உடனடியாக கட்டடம் கட்டி தருவது மட்டுமின்றி கடல் அரிப்பு ஏற்படாத வண்ணம் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும்" என தெரிவித்தனர்.