விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி அருகே அமைந்துள்ள மரக்காணத்தில், மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமாக சுமார் 3,500 ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்யும் உப்பளங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வேதாரண்யம், தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் மரக்காணம் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இத்தொழிலை நம்பி இப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உப்பு உற்பத்தி துவங்கி நவம்பர் மாதம் வரை நடைபெறும். இந்நிலையில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் பெய்த பருவ மழையால், இப்பகுதியில் இருந்த உப்பளங்களில் குவிக்கப்பட்ட மேடுகள், நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் உப்புகளின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனை ஈடுகட்டும் வகையில், உப்பு உற்பத்தியை அதிக அளவில் தர வேண்டும் என்ற நோக்கில், உப்பளத் தொழிலாளர்கள் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும், இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வரும் காரணங்களினால், உப்பு உற்பத்திக்கான முதற்கட்டப் பணிகளான பாத்திகள் அமைத்தல், பாத்திகளைப் பதப்படுத்துதல் போன்ற பணிகளை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். மேலும், அதிக வெப்பத்தின் காரணமாக கடல் நீரினை பாத்திகளில் தேக்கி ஆவியாதல் முறைப்படி உப்பளங்களில் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை.. கூலிங்கான திண்டுக்கல்! - Dindigul Rain