சென்னை: சென்னை சூளைமேட்டில் பத்மநாபன் நகர் பிரதான சாலையில் துரை என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் கடை மற்றும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என இரு தளங்கள் உள்ளன. இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணியளவில் எதிர்பாராத விதமாக பழைய இரும்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, தீ மளமளவென பரவி குடோனின் இரு தளங்களில் உள்ள பெரும்பாலான பகுதியில் கொழுந்து விட்டு எரியத் துவங்கியுள்ளது. அதனால் கரும்புகை வான் உயரத்திற்கு எழுந்துள்ளது. அதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கோயம்பேடு தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் படுக்கை சரிந்து சிறுவன் காயமடைந்த விவகாரம்: மதுரை ரயில்வே கோட்டம் விளக்கம்!
இருந்தபோதும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், அண்ணா நகர், மதுரவாயில், எழும்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்த வந்த 8 தீயணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இரும்புக் கடைக்கு அக்கம் பக்கத்தில் வீடுகள் இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பிற்காக 4 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், குடோன் உள்ளே யாரும் இல்லாததாலும், தீ விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டதாலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்