திருப்பூர்: இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் போட்டு லைக்ஸ் வாங்குவதற்கு பலரும் பல விதமான கண்டென்ட்டுகளை யோசிக்கின்றனர். அதில் சில வீடியோக்கள் ஆரோக்கியமானதாகவும், சில வீடியோக்கள் முகம் சுளிக்கும் வகையிலும் அமைகிறது. குறிப்பாக, சில காதலர்கள் ரொமான்ஸ் என்ற பெயரில் கண்டபடி போடும் வீடியோக்கள் நெட்டிசன்களை கடுப்பேற்றி வருகிறது.
மேலும், ரீல்ஸ் போடுவதற்காக சாலை விதி மீறல்கள், சட்ட மீறல்கள் என பலவிதமான விதிமீறல்களை செய்யவும், இந்த இன்ஃப்ளூயன்சர்கள் தயங்குவதில்லை.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளம் காதல் ஜோடி ஒன்று மோட்டார் சைக்கிளில் வாகனம் ஓட்டியபடியே ரொமாண்ட்டிக் ரீல்ஸ்களை பதிவு செய்தனர். இதற்காக பெரும் மெனக்கெடல் செய்து சினிமா டூயட்டுக்கு இணையாக, மோட்டார் சைக்கிளில் இளம்பெண் வாகனம் ஓட்டுவதும், காதலன் அந்த பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ரொமான்ஸ் செய்வதுமாக ரீல்ஸ் போட்டிருந்தனர்.
சாலை விதிகளை மீறி, ஹெல்மெட் கூட அணியாமல் இஷ்டத்துக்கு டேங்க் மேல் உட்கார வைத்து வாகனம் ஓட்டிய அந்த ஜோடியின் ரீல்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்தது. இதைப்பார்த்து பலரும் இவர்களின் விதிமீறல்களை காவல்துறை கவனிக்க வேண்டும் என்று அந்த ரீல்ஸ் வீடியோவை ட்ரெண்ட் செய்தனர். மேலும், வீடியோவை திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் ட்விட்டர் மூலம் டேக் செய்தும் இருந்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த ஜோடியை கண்டுபிடித்து வாகன உரிமையாளரான ராமர் என்பவர், அந்தப்பெண்ணுக்கு வாகனத்தை ஓட்டக்கொடுத்ததற்காக ரூ.5 ஆயிரம் அபராதம், ஓட்டுனர் உரிமமின்றி வாகனத்தை ஓட்டுதல் மற்றும் தலைக்கவசம் அணியாமல், ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கியது என மொத்தமாக ரூபாய் 13,000 அபராதம் விதித்துள்ளனர்.
இதையும் படிங்க: 6 வீடுகளுக்கு 3 அடி வழி தான்.. கோயில் கட்டும் பெயரில் அடிதடி, களேபரம்.. திருப்பத்தூரில் பரபரப்பு!