திருநெல்வேலி: நெல்லை சிந்துப்பூந்துறையைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர், கடந்த 2022 பிப்ரவரி 27ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து ராமநாதபுரத்துக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதற்கு முன்னதாக அவர், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இரவு உணவு வாங்கச் சென்றுள்ளார்.
அங்கு அவர், நெய் ரோஸ்ட், புரோட்டா மற்றும் மஸ்ரூம் மசாலா தோசை ஆகியவை அடங்கிய உணவினை பார்சல் கேட்டுள்ளார். இதற்காக சுப்ரமணியன் 484 ரூபாய் பணத்தைக் கட்டி பில் பெற்றுள்ளார். இந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் சுப்பிரமணியனுக்கு பார்சல் வழங்காமல் ஹோட்டல் ஊழியர்கள் காலதாமதம் செய்துள்ளனர்.
இது குறித்து சுப்ரமணியன் கேட்டபோது, அவருக்கு வழங்க வேண்டிய பார்சலை வேறு ஒரு நபருக்கு மாற்றிக் கொடுத்து விட்டதாகவும், தற்போது சுப்ரமணியன் கேட்ட உணவு காலியாகிவிட்டது எனவும் கூறியுள்ளனர். மேலும் இட்லி, தோசை மட்டுமே இருப்பதாக அலட்சியமாகத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், தான் உணவிற்காக செலுத்திய பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
அதற்கு ஊழியர்கள் ரசீது கொடுத்த பிறகு பணத்தைத் திருப்பித் தர முடியாது என்றும், வேறு ஒரு நாளில் வந்து மீண்டும் உணவு வாங்கிச் செல்லுங்கள் எனவும் கூறி, சக வாடிக்கையாளர்கள் மத்தியில் சுப்பிரமணியனை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுப்பிரமணியன், அன்று இரவு உணவு அருந்தாமல் பட்டினியோடு ராமநாதபுரத்திற்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து தனது மன உளைச்சலுக்கு ஹோட்டல் நிர்வாகத்தின் சேவை குறைபாடுதான் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி, நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் பிரம்மா மூலம் ஹோட்டல் நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், சுப்ரமணியனின் வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத் தலைவர் கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர், சுப்பிரமணியனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ஐந்தாயிரம் ரூபாயும் மற்றும் வழக்குச் செலவுக்கு 2 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 7 ஆயிரம் ரூபாயினை, சம்பந்தப்பட்ட தனியார் ஹோட்டல் நிர்வாகம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் பணம் கேட்ட ஊழியர்.. நுகர்வோர் நீதிமன்றம் ரூ.55 ஆயிரம் அபதாரம் விதிப்பு!