சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது. இவ்வாறு புதிய துணை முதலமைச்சராக பதவி உயர்வு பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், நடிகர் சத்யராஜ் தொலைபேசி மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் சிலம்பரசன் மற்றும் சந்தானம் ஆகியோர் சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சங்கமும் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.