சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், சுமார் 30 வயதுடைய பெண் பயணி ஒருவர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு மறுநாளே இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தார். இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அந்தப் பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதையடுத்து பெண் சுங்கத்துறை அதிகாரிகள் பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர். அதோடு அவரது உடைமைகளையும் சோதித்தனர். அப்போது அவரது பையில் பார்சல் ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையும் படிங்க: திகைத்துப்போன பாரிமுனை.. டெலிவரி பாய்ஸ் உடையில் மெத்தம்பெட்டமைன் விற்பனை.. மூன்று பேர் கைது..!
அந்தப் பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கஞ்சா பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தப் பார்சலில் சுமார் 3.8 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 2 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதன் பின்பு சுங்கத்துறை அதிகாரிகள் கஞ்சா கடத்தல் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து இந்த கஞ்சா போதை பொருளை வேறு யாரோ ஒருவர் கடத்திக் கொண்டு வந்து தாய்லாந்து நாட்டில் இந்த பெண் பயணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
மேலும், இந்த பெண் போதை கடத்தும் கும்பலிடம் கூலிக்காக வேலை செய்பவர் என்றும் தெரிய வந்தது. மேலும், சமீபத்தில் சென்னையில் போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திரைப்பட துணை நடிகைக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்