சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவில் வசித்து வந்தவர், மோகன். இவரது மனைவி யமுனா. இவர்களுக்கு சாய் ஸ்வாதி என்ற மகளும் தேஜஸ் என்ற ஐந்து வயது மகனும் உள்ளனர். இதில் சாய் ஸ்வாதி, சைதாப்பேட்டை உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், மகன் தேஜஸ் நர்சரி பள்ளியில் படித்து வந்தனர்.
யமுனா வீட்டின் அருகே உள்ள பிரிண்டிங் பிரசில் வேலை செய்து வருகிறார். மோகன் இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி பழைய இரும்பு கடையில் மொத்தமாக போட்டு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் வேலைக்கு சென்று வந்த யமுனாவிற்கு வேறு ஒரு நபருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளி மோகன், மனைவியைப் பிரிந்து சில வருடங்கள் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பலமுறை மோகனை சந்தித்த யமுனா இனிமேல் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
ஆனால் மீண்டும் வேறு ஒரு நபருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் யமுனா இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உலைச்சலில் மோகன் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தநிலையில் நேற்று வேலை முடிந்துவிட்டு, யமுனா வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு உட்புறமாகப் பூட்டி இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த யமுனா வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது மகள் சாய் ஸ்வாதி மற்றும் தேஜஸ் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், மோகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த குறித்து தகவல் அறிந்த குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மூவரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் யமுனாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறையில் இருந்து வெளியே வந்ததும் கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசியது என்ன?