திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நான்காயிரம் ஏக்கர் அளவில் முப்போகம் நெற்பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மூன்றாம் போகத்திற்கான நெல் நாற்று நடவை கடந்த 20 நாட்களுக்கு முன்பாக நடவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விடாமல் பெய்த கனமழையின் காரணமாக நடவு செய்த மூன்றாம் போகம் நெல் நாற்றுகள் சுமார் 200 ஏக்கர் அளவில் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
வங்கியில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து நடவு செய்த 200 ஏக்கர் நெல் நாற்றுகள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதம் அடைந்திருப்பதாக விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த விவசாய நிலங்களை திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குன் பின் அவர் கூறுகையில், "நீரில் மூழ்கியுள்ள நெல் நாற்றுகள் தண்ணீர் வடிந்த பின்னர் உரங்கள் மூலமாக காப்பாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காப்பாற்ற முடியாத நடவு செய்த நெல் நாற்றுகளை கணக்கெடுத்து அரசு நிவாரணம் வங்கிட ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவித்தார்.
இதுகுறித்து விவசாயி கஜேந்திரன் கூறுகையில், "கடன் வாங்கி நாங்கள் பயிர் வைத்துள்ளோம். வருடம் தோறும் இதே போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக, என்னுடைய நிலங்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதுகுறித்து விவசாயி விஜயகுமார் கூறுகையில், "கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஏக்கர் நாங்கள் பயிர் வைத்துள்ளோம். தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த கனமழையினாலும் பயிர்கள் முழுவதுமாக மூழ்கி உள்ளது. நாங்கள் எங்கள் நகைகளை வைத்து கடன் வாங்கி பயிர் வைத்துள்ளோம். ஆனால் பருவமழை காரணமாக முழுவதுமாக நீரில் மூழ்கி விட்டன.
இதனால் நாங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றோம். உடனடியாக இதற்கு வேண்டிய நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை பகுதியை எப்படி பாதுகாத்துக் கொள்கிறாரோ அதேபோல விவசாய நிலங்களையும் அவர் பாதுகாத்திட வழிவகை செய்ய வேண்டும். எங்களுக்கு வேண்டிய நிவாரணம் உடனடியாக கொடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாக்கெட் பால் விலை உயர்வா? ஆவின் நிறுவனம் விளக்கம்!
இதுகுறித்து பெண் விவசாயி சந்திரம்மாள் கூறுகையில், "என்னுடைய குடும்பத்தார் எனக்கு யாருமில்லை. நான் என் மருமகளிடம் கடன் வாங்கி இதை வைத்துள்ளேன். காதில், மூக்கில் போட்டுள்ள நகைகளை அடகு வைத்து இதன் மூலமாக நாங்கள் பயிர் வைத்துள்ளோம். உடனடியாக எங்களுக்கு ஏதாவது கிடைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் தர வேண்டும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்