தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் மின்சார துண்டிப்பைக் கண்டித்து இன்று (மே.03) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் இது குறித்து பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுந்தரவிமல்நாதன் கூறுகையில், "காவிரி சமவெளி மாவட்டங்களில் கோடை சாகுபடியாக நெல், வாழை, பருத்தி, உளுந்து, நிலக்கடலை, பயிறு, எள்ளு போன்ற பல பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழக அரசு, வேளாண் பணிகளுக்கு 14 முதல் 16 மணி நேர உத்தரவாத மும்முனை மின்சாரத்தைக் கடந்த சில வாரங்களாக வழங்காமல் வருகிறது. இதனால் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இதற்காக கூடுதல் செலவாகிறது. மகசூல் பாதிக்கும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
தற்போது பல இடங்களில் 10 மணி நேரம் கூட வேளாண் பணிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவது கேள்விக்குறியாகவுள்ளது. பல மணி நேரம் மின் வெட்டும் நிலவுகிறது. இப்பிரச்சனையை இதுவரை தமிழக அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எனவே தமிழக அரசு, தலைமைச் செயலாளர் தலைமையில் அவசர கூட்டத்தைக் கூட்டி, இப்பிரச்சனை விரைந்து நல்ல தீர்வு காண முன்வரவேண்டும்.
தவறும் பட்சத்தில், வருகிற 6ஆம் தேதி திங்கட்கிழமை கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு, ஏராளமான விவசாயிகள் திரண்டு அறவழியில், அமைதியான முறையில் உத்தரவாத மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இதற்கு முன்னோட்டமாக இன்று கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தலையில் மின் மோட்டார்களை சுமந்தபடி, கோரிக்கை முழக்கங்களை எழுப்பியபடி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 60 வயதில் மிஸ் யுனிவர்ஸ்; அர்ஜெண்டினா பெண் சாதனை! - 60 Years Old Wins Miss Universe