மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் என்ற கிராமத்தில் சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, குத்தாலம் பகுதியை சேர்ந்த ஹாஜாமைதீன் என்பவர் 1.27 ஏர்ஸ் பரப்பளவில் மண் எடுக்க ஏற்கெனவே வருவாய்த்துறையில் பெறப்பட்ட உரிமத்தை வைத்துக்கொண்டு, அங்கிருந்து 700 மீட்டர் தொலையில் 1.77 ஏர்ஸ் பரப்பளவில் உள்ள இடத்தில் அனுமதி பெறாமலேயே சுமார் 45 அடி ஆழம் வரை சட்டவிரோதமாக சவுடு மண் எடுத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளஞ்செழியன் என்பவர் தரங்கம்பாடி வட்டாட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். மேலும், இதுவரை அனுமதி பெற்ற இடத்தில் ஒரு கைப்பிடி அளவு மண் கூட எடுக்கப்படவில்லை என்றும், தேசிய நெடுஞ்சாலை NH45ஏ நாகப்பட்டினம் சாலைக்கு அனுமதி பெற்று 30% மட்டுமே சாலைக்கு செல்லுகிறது மீதம் 70% தனியாருக்கு கட்டுமானத்திற்கு செல்கிறது என்றார்.
மேலும், சவுடு மண் எடுக்கும் இடத்திற்கு தகவல் பலகையோ, முள்வேலிகளையோ அமைக்கப்படவில்லை என்றும், சென்ற வருடம் எங்கள் கிராமத்தில் செயல்பட்ட குவாரியில் கௌதமன் என்பவர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாகவும் மேலும் கடற்கரைக்கு அருகே உள்ள தங்களது கிராமத்தில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனி ஆளாக வந்த இளஞ்செழியன் ஆட்சியர் அலுவலகவாசலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் உள்வரை கோரிக்கை மனுவை சுமந்தவாறு மண்டியிட்டு நூதன முறையில் உள்ளே சென்றார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இல்லாததால் சட்டவிரோதமாக செயல்படும் சவுடு மண் குவாரியை தடை செய்ய வலியுறுத்தியும், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் மனு அளித்தார். மனுவைப் பெற்ற வருவாய் அலுவலர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்