கோயம்புத்தூர்: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக் கல்லூரி பயிற்சி மையத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கோவை மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் என 200க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
மேலும், இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், யானை உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பயிர் சேதத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, குறை தீர்ப்புக் கூட்டத்தில் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேணுகோபால், "கடந்த 20 வருடங்களாகத்தான் யானைகள் வனத்திலிருந்து வெளி வருவது அதிகரித்து வருகிறது. மேலும், யானை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் போவதை தடுக்க வனத்துறையினரால் முடிந்த பணியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்தால் மட்டுமே விவசாயத்தை பாதுகாக்க முடியும்" என கூறிய அவர், திடீரென மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தடாகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பேசுகையில், "யானை, பன்றி, மான், மயில்களால் சேதப்படுத்தப்படும் பயிர் சேதத்திற்கான இழப்பீடு தொகையை அதிகரித்து தர வேண்டும். மின் வேலி சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்த தேவையான கால அவகாசம் வேண்டும். மின் வேலி அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியம் தர வேண்டும்" என்றனர்.
விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கந்தசாமி பேசுகையில், "மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும். மலையோரப் பகுதிகளை வரையறுத்து கிராமங்கள் முழுவதையும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தில் இருக்கக்கூடாது. பட்டியல் 1-ல் வரும் வன உயிரினங்களால் சேதப்படுத்தும் பயிர்களுக்கு நிவாரணத்தை அரசு தர வேண்டும். வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தை திருத்த வேண்டும். பன்றிகளை சுடுவதற்கான அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்" என்றார்.
விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் பேசுகையில், "பயிர் சேதத்திற்கான இழப்பீடுத் தொகை ரூ.1.6 கோடி விரைவில் பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். வன உயிரினங்களின் பயிர் சேதத்திற்கு இழப்பீடுத் தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
பயிர் காப்பீடு பொறுத்தவரையில், சிறுகுறு விவசாயிகள் கூட்டுறவு சங்கமாக இணைந்து விண்ணப்பிக்கும்போது அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும். வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது பற்றி பரிசீலிக்கப்படும். மின்வேலிக்கு மானியம் பெற்றுத் தருவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 5 நாட்கள் பயணம் செய்து ரயிலில் வந்திறங்கிய 1,600 கிலோ கெட்டுப்போன இறைச்சி.. சென்னையில் அதிர்ச்சி!