திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர், இவரது கடைக்கு வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நான் ஜிஎஸ்டி அதிகாரி எனக் கூறி சோதனை செய்வதாக கடைக்குள் வந்துள்ளார்.
அப்போது, ஜிஎஸ்டி முறையாகச் செலுத்துகிறீர்களா? எனக் கடையில் இருந்த பணியாளரை மிரட்டும் பாணியில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கடையில் வேலை செய்பவர் இல்லை இது பற்றி எங்களுக்குத் தெரியாது. கடையின் உரிமையாளரிடம் தான் ஜிஎஸ்டி குறித்துக் கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதைக் கேட்ட அந்த நபர் அப்படியா? அப்படி என்றால் உங்களிடம் எந்த ரசீதும் இல்லை அப்படிதானே. சரி ஒன்றும் பிரச்சினையில்லை ரூ.2,000 இருந்தால் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். அதற்குக் கடையிலிருந்த பணியாளர், “ இல்லை என்னிடம் பணமில்லை” எனக் கூறியுள்ளார். அதைக் கேட்ட அந்த நபர் கடையிலிருந்து கிளம்பி உள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி.. கோர்ட் வழங்கிய உத்தரவு..!
இந்த காட்சிகள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதேபோன்று திருமுல்லைவாயில், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகளிடம் போலி ஜி.எஸ்.டி அதிகாரியாக வந்து சோதனை மேற்கொள்ளுவது போல் பணம் பறிப்பில் ஈடுப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது போன்று போலி ஜிஎஸ்டி அதிகாரி போல் வந்து சோதனை நடத்தி பணம் கேட்பவர்களிடம் வியாபாரிகள் விழிப்புடன் இருக்கக் கோரி போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.