திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் சுதாகர் - சுமங்கலி தம்பதியினர். இவர்கள் மருத்துவ படிப்பு படிக்காமல் திருப்பத்தூர் சேர்மன் துரைசாமி தெரு பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்தக் கிளினிக்கில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடைபெறுவதாக திருப்பத்தூர் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கண்ணகிக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனை விசாரணையின்போது கெஜல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்துரு - ஆர்த்தி தம்பதியினருக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்திருப்பதை சுமங்கலி ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: முன் ஜாமீன் கேட்கும் நடிகை கஸ்தூரி.. நாளை விசாரணைக்கு வரும் வழக்கு!
இந்நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் சுதாகர் - சுமங்கலி போலி மருத்துவ தம்பதியினரை திருப்பத்தூர் நகர போலீசாரி கைது செய்து, அந்த கிளினிக்குக்கு சீல் வைத்தனர். மேலும் இந்த புகாரின் பேரில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இது போன்ற போலி மருத்துவர்கள் உள்ளனரா? எனவும் போலீசார் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர்.
இந்த சோதனையின் போது திருப்பத்தூர் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இணை இயக்குநரின் உதவியாளர் சுந்தரமூர்த்தி, வெங்கடேசன், மருந்தாளுநர்கள் குரு ராகவேந்திரன், கார்த்திக், உள்ளிட்டோர் உடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.