அதிமுக வெற்றி பெறாததற்கு இதுதான் காரணமா? - ஓபிஎஸ் கூறுவது என்ன? - ops about aiadmk - OPS ABOUT AIADMK
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான். அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Published : Sep 27, 2024, 4:32 PM IST
சென்னை : சி.பா.ஆதித்தனார் 120வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ் தந்தை சி.பா.ஆதித்தனார் 120வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய புகழுக்கு பெயர் சேர்க்கின்ற வகையில், அதிமுக தொண்டன் உரிமை மீட்பு குழு சார்பாக புகழஞ்சலி செலுத்தி இருக்கிறோம்.
பத்திரிக்கை உலகில் பாமர மக்களில் இருந்து அடித்தட்டு மக்கள் வரை தமிழை சுலபமாக படிக்க அவர் ஆற்றிய பணி இன்றும் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பாமர மக்களால் பாராட்டப்படுகிறது. அவர் புகழ் உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும்.
ஓபிஎஸ் சசிகலா போன்றவர்களை இணைத்துக் கொள்ள முடியாது என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்த கேள்விக்கு, ஏற்கனவே நான் சொன்னது போல அதிமுகவின் பிரிந்து இருக்கக்கூடிய சக்திகள் அனைவரும் தொண்டர்கள் தான். தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது.
இதழியியல் முன்னோடி, வழக்கறிஞர், அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்ட திரு. சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய சாதனைகள் என்றென்றும் போற்றுதலுக்குரியது. pic.twitter.com/ZeZsuWus0g
— O Panneerselvam (@OfficeOfOPS) September 27, 2024
இதையும் படிங்க : "அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை" - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு பெற்று வாங்கி ஏழு இடங்களில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது. 13 இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது. பிற நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருக்கக் கூடியதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது. தொண்டர்கள் ஒன்று சேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இந்த இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட போது என்னை எதிர்த்து போட்டியிடுவதற்கு ஆறு பன்னீர் செல்வம் என்னுடன் நின்றார்கள் என்ன நடந்தது? இரட்டை இலையை டெபாசிட் இழக்க செய்து தமிழக அரசியலில் அருவருத்தக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சுயேச்சையாக நின்ற நான் 33 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறேன் என்பது தொண்டர்களும், பொதுமக்களும் எங்கள் பக்கத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்