சென்னை: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி எனக் கூறப்படும் கே.எஸ் கீதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அடையாரைச் சேர்ந்த சரத் காகமானு, பீனா, சுஜினி மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக ரவிச்சந்திரன் மற்றும் கே.எஸ் கீதா ஆகியோர் மீது 2006-ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், எரா ராஜா கணேசன் மற்றும் ரவிச்சந்திரன் மற்றும் சிலரை கைது செய்தனர். இந்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில், கோயம்புத்தூரை சேர்ந்த எரா ராஜா கணேசன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றனர்.

அதற்கு தனது சகோகரி கீதாவுக்கு தாங்கள் பவர் ஆப் அட்டார்னி வழங்கியதாக போலியாக ஆவணம் தயாரித்து இடத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இடத்தை விற்பனை செய்வதாக கூறி 70 கிரவுண்ட் இடத்தை 29 கோடி ரூபாய்க்கு ஜெயச்சந்திரன் என்பவரின் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டு ஒரு கோடி ரூபாய் முன்பணம் வாங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க |
மேலும், சித்தார்த்த பில்டர்ஸ் நிறுவனத்துக்கு 45 கிரவுண்ட் இடத்தை ரூ.20 கோடிக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டு, 2 கோடி ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளது. மேலும், தடயவியல் துறை விசாரணையில் பவர் ஆப் அட்டர்னி போலியானது என உறுதி செய்யப்பட்டது. 82 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் செல்லபாண்டியன், காவல்துறை தரப்பில் நில அபகரிப்பு மோசடி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கீதாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 14 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.