புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் இது குறித்த எந்த நடவடிக்கையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை.
உடனடியாக அரசும், மாநகராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையின் பணியாளர்களைக் களத்தில் இறக்கி தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். தண்ணீரில் இறந்து கிடக்கும் எலி உள்ளிட்ட உயிரினங்களால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த விஷயத்தில் அரசு மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும்.
பொதுமக்கள் காய்ச்சிய நீர் மற்றும் கசாயம் போன்ற சித்த மருத்துவ முறை குறித்து அறிந்து செயல்பட வேண்டும். மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் தங்களைத் தானே தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: குளம் போல் மாறிய குடியிருப்பு! வீடுகளை காலி செய்யும் மக்கள்..
சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் இவ்வளவு சதவீதம் முடிவடைந்ததுள்ளது என முதல்வர் ஒன்று கூறுகிறார் அமைச்சர் ஒன்று கூறுகிறார். மேயர் ஒன்று கூறுகிறார். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் எவ்வளவு சதவீதம் வெள்ள தடுப்பு பணிகள் முடிந்துள்ளது, அதற்காக எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட கேள்விக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அதை வைத்து அவர்கள் அதிமுக மீது எழுப்பும் வெள்ள தடுப்பு பணிகள் கேள்விக்குப் பதில் அளிக்க முடியும்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்