தஞ்சாவூர்: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு அறிமுக கூட்டம் நேற்று இரவு (வியாழன் கிழமை) கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் உள்ள ராயா அனுக்கிரக திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ் மணியன், வேட்பாளர் பாபுவை அறிமுகம் செய்து வைத்து, இரட்டை இலை சின்னத்திற்காகத் தொண்டர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன், "மோடியின் பீரங்கித் தாக்குதல் ஒரு பக்கம், அமித்ஷாவின் ராக்கெட் தாக்குதல் ஒரு பக்கம் என இருக்கும் போது, அட எது வந்தால் என்ன போங்கப்பா பாத்துக்கலாம் என நெஞ்சுரத்துடன் எதிர்த்து நிற்பவர் எடப்பாடி பழனிசாமி. அதே நெஞ்சுரத்தை உங்களிடமும் எதிர்பார்க்கிறேன். எப்போதுமே ஒரு முறை ஓட்டுக் கேட்டாள், அதிமுகவிலிருந்து ஓட்டுக் கேட்டார்கள் என்பார்கள், 2வது முறை ஓட்டுக் கேட்டாள் தான் இரக்கக் குணம் வரும்.
சபரி மலைக்கு மாலை அணிந்தால் விரதம் இருப்பதைப் போல, எஸ்டிபிஐ மற்றும் தேமுதிக உட்பட அனைவரும் பழனிசாமிக்கு விரதம் இருக்கிறோம். அந்த உணர்வோடு கங்கணம் கட்டிக் கொண்டு வேட்பாளரின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும். அதிமுகவிற்குக் கூட்டணி பலம் இல்லை என்பது உண்மையல்ல, அதிமுகவிற்கு மறைமுக வாய்ப்பு எக்கச்சக்கமாய் உள்ளது. அதனை இப்போது வெளிப்படையாகக் கூற முடியாது.
பாஜக போன்ற கட்சிகள் இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள். ஆனால், பாமகவிற்கு இட ஒதுக்கீடு தான் அவர்களது கொள்கை, உயிர்மூச்சு எல்லாம். அப்படிப்பட்ட கட்சி தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடே வேண்டாம் என்ற கட்சியுடன் சேர்ந்துள்ளது. இது எங்குப்போய் முடியப் போகிறது எனத் தெரியவில்லை. எல்லாம் கேத்தன் தேசாயிக்குத் தான் தெரியும்.
கேத்தன் தேசாய் என்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் செயலாளராக இருந்தவர். இவரது வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை செய்து, 1,500 கிலோ தங்கம், 2 ஆயிரத்து 500 கோடி ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. அதனை கிளியர் பண்ணிகலாம்ன்னு போகிறார். எப்படி கிளியர் ஆகும். நம்ம ஓபிஎஸ் எடுக்காத காவடியா? என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் யார் ஆண்டாலும் சரி, அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், போயஸ் கார்டன் வந்து கூட்டணி பேசியதாகத் தான் வரலாறு உள்ளது. ஆனால், பாமகவினர் கூட்டணிக்காகச் சென்ற போது, 2 சீட்டுக் கொடுக்கின்றனர். இவர்கள் கேட்டது 5 சீட்டு, ஆனால், அவர்கள் கொடுத்தது 2 சீட்டு. வெளியே வந்து நாங்கள் 1 சீட்டு தான் கேட்டோம், ஆனால், அவர்கள் 2 சீட்டு தந்துள்ளனர் என்கின்றனர்.
ஓபிஎஸ் மோடி வந்திருந்த மேடையில் பேச அவர்கள் துண்டுச்சீட்டைக் கொடுத்து பேச்சை நிறுத்தச் சொல்கின்றார்கள். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். தாமரையில் நின்றால் நில், இல்லையென்றால் கிளம்பு எனத் தெரிவித்து விட்டனர். தமிழ்நாட்டில் எடப்பாடி மட்டும் இல்லை என்றால், அதிமுகவைப் பிள்ளை பிடிக்கின்ற கூட்டம் கொண்டு போயிருக்கும். பிள்ளை பிடிக்கும் கூட்டத்தை விரட்டி அடித்தவர் எடப்பாடி" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் தஞ்சை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கே பாரதி மோகன், மாநகர செயலாளர் இராமநாதன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.